ஆந்திராவில் சமீப காலமாக கோயில்கள், சிலைகள், தேர் ஆகியவற்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்கால தேர் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டது.
இந்நிலையில், விஜயநகரம் மாவட்டம், நல்லமர்லு பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலை சில தினங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், கோதண்டராமரின் தலை பாகம் மட்டும் கோயிலின் அருகே உள்ள போடிகுண்டா மலையில் உள்ள ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே, ஆந்திராவில் இந்து கோயில்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்நிலையில், இந்து கோயில்களின் சுவாமி சிலைகளை சேதப்படுத்தினால் கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார் என்றும் அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.