ஆடுகளுக்காக மரத்திலிருந்து இலைகள் பறித்ததற்காகச் சிலரால் தாக்கப்பட்டதை அடுத்து அவமானம் தாங்காமல் தலித் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல்நிலைய அதிகாரி ஷெர் சிங் ராஜ்புத் புதன்கிழமை கூறியதாவது:
''ஆஸ்தா கிராமத்தில் தர்ம்பால் திவாகர் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். வழியில் ஒரு மாமரத்திலிருந்து ஆடுகளுக்காகக் கொஞ்சம் இலைகளைப் பறித்துப் போட்டார். இதனைப் பார்த்த சிலர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
வீடு திரும்பிய பின் தரம்பால் திவாகர் இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த அந்த இளைஞர் ஒரு அறையில் தன்னை அடைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
தர்ம்பாலின் குடும்பத்தினர் இது தொடர்பாக சிலர் மீது புகார் அளித்துள்ளனர். தற்கொலைக்குத் தூணடியதாக மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
தலித் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.