சத்தியநாராயண ராவ் 
இந்தியா

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது: சகோதரர் சத்தியநாராயண ராவ் தகவல்

இரா.வினோத்

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருவதாக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியநாராயண ராவ் பெங்களூருவில் `இந்து தமிழ் திசை' நாளிதழிடம் நேற்று கூறியதாவது:

நான் ரஜினியிடம் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்ததை தொலைக்காட்சி மூலமாக இன்றுதான் (நேற்று) அறிந்தேன். கடந்த 3-ம் தேதி கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர் பெங்களூரு வந்து என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றார். சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத்துக்கு செல்வதற்கு முன்பு வரை கட்சி தொடங்குவதில் உறுதியாக இருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பு

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தமிழக மக்களிடம் நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நானும் அதை மிகவும் எதிர்பார்த்தேன். பல கோயில்களுக்கு சென்று பூஜையும் யாகமும் செய்தேன். அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கிறது. சினிமாவில் சாதித்ததைப் போல அரசியலிலும் சாதிப்பார் என நம்பினேன்.

ரஜினியின் அரசியல் வருகையை ரசிகர்கள் மறப்பது கடினம். இந்த செய்தியை கேட்டதும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களைப் போலவே நானும் ஏமாற்றமாகவே உணர்கிறேன். ரஜினி தன் உடல்நிலையை காரணமாக சொல்லி இருக்கிறார். அதனால் அவரது முடிவை ஏற்றுகொள்கிறேன். அதேபோல அவரின் ரசிகர்களும் இந்த கடினமான முடிவை ஏற்றுகொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். ரஜினி கட்சி தொடங்குவது அவரது விருப்பம். அவரை கட்டாயப்படுத்தக் கூடாது.

ரஜினி எப்போதும் சரியான முடிவைத்தான் எடுப்பார். யாருடைய பேச்சைக் கேட்டும் அவர் முடிவு எடுக்க மாட்டார். அவர் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்பதே எல்லாவற்றை விடவும் முக்கியம்.

இவ்வாறு சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT