பாட்னா: பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
பிஹாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
இதையடுத்து, அந்தப் பேரணியை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு விவசாயிகளை அறிவுறுத்தினர். ஆனால், விவசாயிகள் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.