ஒடிஷாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஒடிஷா மாநிலம், போலங்கிர் மாவட்டம், கண்டாபான்ஜி நகரைச் சேர்ந்தவர் சாதுராம் ஜெயின். அங்கு சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகள்கள். இதில் 3-வது மகள் சரிகா. சிறுவயதில் போலியாவால் அவரது வலது கால் பாதிக்கப்பட்டது.
எனினும் மனம் தளராத அவர், படிப்பில் மிகச் சிறந்து விளங்கினார். சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்பது அவரது தணியாத ஆசை. ஆனால் அவரது சொந்த ஊர் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவு இல்லை.
தந்தையின் பணிச்சுமை, தனது உடல் குறைபாடு ஆகியவற்றால் வெளியூருக்கு சென்று அவரால் படிக்க முடியவில்லை. இதனால் உள்ளூர் பள்ளியில் வணிகவியல் பயின்றார். பின்னர் வீட்டில் இருந்தபடியே சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார்.
அவரது அறிவாற்றலை பார்த்து வியந்த குடும்பத்தினர் அவரை ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஊக்கப்படுத்தினர். 6 மாதங்கள் மட்டும் டெல்லியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்த அவர் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 527-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியபோது, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படிப்பேன், கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும், கிராமப்புற மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.