ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35ஏ சட்டப்பிரிவு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நேற்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நேற்று அவை கூடியதும், எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியினர், ‘35ஏ சட்டப்பிரிவை பாதுகாக்க வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். மேலும், மாநிலத்தில் தினக்கூலியை முறைப்படுத்தும்படியும் கோஷம் எழுப்பினர்.
கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, சட்டப்பிரிவு 35 ஏ குறித்து விவாதிக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ தேவேந்தர் ராணா கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் அலி முகமது சாகர், “நாங்கள் அவைக்கு குண்டுகளைக் கொண்டு வரவில்லை. 35ஏ சட்டப்பிரிவு குறித்துப் பேச அனுமதி கேட்கிறோம். நீங்கள்(பேரவைத் தலைவர்) அவையை முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறீர்கள்” என்றார்.
மாநில சட்ட அமைச்சர் சயீத் பஷ்ரத் புஹாரி பேசும்போது, “35ஏ சட்டப்பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அலுவல் விதிகளின்படி தற்போது எவ்வித விவாதங்களும் அவையில் அனுமதிக்க முடியாது” என்றார்.
பேரைவத் தலைவர் கேள்வி நேரத்தை அனுமதிக்க முயன்ற போது, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
மிக மோசமாக நடந்து கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர் அல்டாப் கலூவை இந்த தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா உத்தரவிட்டார். பின்னர் கலூ அவைக் காவலர்களால் வெளியேற் றப்பட்டார். எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.