இந்தியா

திருமணத்தில் மொய்ப் பணத்துக்கு பதில் ரத்த தானம்: ஆந்திராவில் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஆந்திராவில் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் நபரின் திருமணத்தில் மொய்ப் பணத்திற்குப் பதில் ரத்த தானம் பெறப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, பிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீலம் தயா சாகர். இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஸ்வேதா என்ற பெண்ணுடன் நேற்று ஸ்ரீ மாதவ சுவாமி தேவஸ்தானத்தில் திருமணம் நடைபெற்றது.

தயா சாகர், திருமணத்துக்கு அழைப்பு விடுக்கும்போதே நண்பர்களும் உறவினர்களும் பரிசுப் பொருட்களையும் மொய்ப் பணத்தையும் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் திருமணத்துக்கு வந்திருந்த நட்புகளும் உறவுகளும் அவரின் கோரிக்கையை ஏற்று, ரத்த தானம் செய்ய முடிவெடுத்தனர். திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள், விருப்பப்பட்டவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரத்த தானம் செய்த உறவுகள், மணமக்களை மனதார வாழ்த்திச் சென்றனர்.

திருமணத்தில் மொய்ப் பணத்திற்குப் பதில் ரத்த தானம் பெறப்பட்டது அங்கிருந்த அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT