இந்தியா

தாத்ரி படுகொலை சம்பவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உ.பி.அரசு: மேலும் ஒருவர் மர்மமான முறையில் பலி

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பி உள்ளது. இதனிடையே, அதே கிராமத்தில் மேலும் ஒருவர் மர்மமான முறை யில் பலியாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை செய்தித் தொடர்பாளர் லக்னோ வில் நேற்று கூறும்போது, “தாத்ரி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படை யில் திங்கள்கிழமை இரவு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

எனினும், இக்லாக் குடும்பத் தினர் மாட்டிறைச்சி சாப்பிட்டதா கவோ பசு கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது பற்றியோ அறிக் கையில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும் இக்லாக் கொலை செய்யப்படுவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் அறிக்கையில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சிலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றியும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச் சகம் கடந்த 1-ம் தேதி உத்தரவிட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவர் மர்ம மரணம்

பிசோதா கிராமத்தில் இக்லாக் வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஜெய் பிரகாஷ் (24) என்பவர் அவரது வீட்டில் மர்மமான முறை யில் நேற்று இறந்து கிடந்தார். இக்லாக் படுகொலை தொடர்பாக தேடப்படும் நபர்கள் பட்டியலில் இல்லாதபோதும் ஜெய் பிரகாஷை போலீஸார் துன்புறுத்தி வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆய்வாளர் ரன்விர் சிங் கூறும்போது, “ஜெய் பிரகாஷ் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உடல்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும்” என்றார்.

களங்கம் ஏற்படுத்த சதி

லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறும் போது, “உலகம் வளர்ச்சிப் பாதை யில் பயணிக்கும் வேளையில், சில அமைப்புகள் மதத்தை அடிப் படையாகக் கொண்டு அரசியல் செய்து நாட்டை பின்னுக்குத் தள்ள முயன்று வருகின்றன. அனைத்து பிரிவினரையும் பாதிக்கும் வகை யில் அவர்கள் பிரச்சினை களையும் விவாதங்களையும் எழுப்புகின்றனர்.

குறிப்பாக எனது ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுத்தி, மாநிலத் தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட சதி செய்கின்றனர். உ.பி.யில் மதவாத சக்திகள் மாநிலத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை களை மக்கள் அனுமதிக்க மாட்டர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

துரதிருஷ்டவசமானது: ராஜ்நாத் சிங்

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தாத்ரி கொலை சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு குடிமகனும் மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இது நம் அனைவரின் பொறுப்பு ஆகும்” என்றார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “தாத்ரி உட்பட நாட்டின் சில பகுதிகளில் நிகழ்ந்த மத ரீதியான மோதல்கள் கவலை அளிப்பதாக உள்ளது. மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தி நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பலவீனப்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT