உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் ஜம்போ சவாரி என அழைக்கப்படும் யானை ஊர்வலத்தில் பங்கேற்ற குதிரை திடீரென நிலை குலைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூரு தசரா திருவிழா கடந்த 13 -ம் தேதி தொடங்கி 11 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்தது. விஜய தசமியை முன்னிட்டு நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணிக்கு மைசூரு அரண்மனையில் உள்ள நந்தி கொடிக்கு முதல்வர் சித்தராமையா பூஜை செய்தார். இதைத் தொடர்ந்து சரியாக 2 மணிக்கு தொடங்க வேண்டிய ஜம்போ சவாரி (யானை ஊர்வலம்) முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் வராததால் தாமதம் ஆனது.
மைசூரு மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்த பிறகு மாலை 3.07 மணிக்கு ஜம்போ சவாரி தொடங்கியது. அர்ஜுனா என்ற யானை 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை சுமந்து ராஜவீதியில் ஊர்வலமாக வந்தது. நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை எமகண்டம் என்பதால், இந்த நேரத்தில் ஜம்போ சவாரி தொடங்கியதால் மகாராஜா குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். எனவே புதிய மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை தவிர்த்து, மகாராணி பிரமோதா தேவி, ராஜகுரு உள்ளிட்டோர் பூஜை செய்ய மறுத்துவிட்டனர்.
அர்ஜுனா யானையை தொடர்ந்து ஜம்போ சவாரியில் பங்கேற்ற 11 யானைகளில் 'கெஞ்சாம்பா' என்ற யானை கூட்டத்தை கண்டு பயந்தது. வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை ஊர்வலத்தில் பங் கேற்க அனுமதி மறுத்துவிட்டனர்.
இதே போல மாலை 7 மணிக்கு தொடங்கி தீப்பந்த ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதால் சில குதிரை கள் அச்சமடைந்தன.மைசூரு அரண்மனை வளாகத்தில் குதிரை கள் மீது அமர்ந்து போலீஸார் அணிவகுப்பு நடத்திய போது, பிரதாப் என்ற குதிரை திடீரென நிலை குலைந்து சரிந்தது.
எமகண்டத்தில் ஜம்போ சவாரி தொடங்கியதாலேயே தசரா திருவிழாவில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டன. இது உடையார் சாம்ராஜ்ஜியத்துக்கும், கர்நாடக மக்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என சில ஜோதிடர்கள், மகாராணி பிரமோதா தேவிக்கு தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘எனக்கு ராகு காலம், எமகண்டம் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை’’ என்றார்.