இந்தியா

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடை 30-ம் தேதி திறப்பு- கரோனா சான்றிதழ் கட்டாயம்

கா.சு.வேலாயுதன்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 30-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

''சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகர விளக்கு பூஜைக்காகக் கோயில் நடை டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. 31-ம் தேதி அதிகாலை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த மாதம் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜனவரி 20ஆம் தேதி கோயில் நடை சாத்தப்படும்.

மகர விளக்கு பூஜை தரிசனத்திற்காக, பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (28-ம் தேதி) மாலை முதல் தொடங்கியது. www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இந்த மகர விளக்கு காலத்தில் எல்லா நாட்களிலும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 31-ம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், கண்டிப்பாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மண்டல காலம் வரை ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் 31-ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர், ஆர்டிலாம்ப் அல்லது எக்ஸ்பிரஸ் நாட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பரிசோதனை நடத்த வேண்டும். இந்தப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 48 மணி நேரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனைச் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும். கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நிலக்கல் பகுதியில் பரிசோதனை நடத்துவதற்கான வசதி இல்லை''.

இவ்வாறு கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT