ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் பற்றி விமர்சனம் செய்துள்ளதன் மூலம பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி தனிப்பட்ட குறுகியகால பயணமாக ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு புறப்பட்டார். அவர் இத்தாலிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜகவைக் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
வெளிநாட்டிற்குச் சென்றபோதும் காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளான இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில், ''தேசத்தின் நலனில் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. இன்று, நிறுவன தினத்தை முன்னிட்டு, உண்மை மற்றும் சமத்துவத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜெய்ஹிந்த்" என்று ராகுல் குறிப்பிட்டு, ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.
ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அவர் இல்லாததற்கு 101 காரணங்கள் இருக்கலாம். நாங்கள் ஊகிக்க விரும்பவில்லை. அவர் பயணத்திற்கு அது சரியான காரணமாக இருக்கக்கூடும். பிரியங்கா ஜி இங்கே இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
பாஜக விமர்சனம்
இந்தச் சம்பவங்களைப் பற்றி பாஜகவின் பல்வேறு தலைவர்களும் பல்வேறுவிதமாக கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "காங்கிரஸ் தனது 136-வது நிறுவன தினத்தைக் கொண்டாடும் வேளையில் ராகுல் காந்தி காணாமல் போயுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பதிலடி
இதற்குப் பதிலளிக்கும் விதமாக கட்சி பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
"ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பயணம் செய்கிறார் என்பதையும், அவர் விரைவில் நம்மிடையே இருப்பார் என்பதையும் நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம்.
ஆனால், இதைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் எதை எதையோ பேசி பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் ஒரு தலைவரை மட்டுமே குறிவைக்க விரும்புவதால் அவர்கள் ராகுல் காந்தியைக் குறிவைக்கின்றனர்.''
இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏஎன்ஐயிடம் கூறுகையில், "ராகுல் காந்தி தனது பாட்டியைப் பார்க்கச் சென்றுவிட்டார். இது தவறா? தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு" என்றார்.