காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த காட்சி | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

அரசியல் சதி போன்ற வார்த்தைகளை விவசாயிகளுக்காகப் பயன்படுத்துவது பாவகரமான செயல்: காங்கிரஸின் 136-வது நிறுவன நாளில் பிரியங்கா காந்தி பேட்டி

பிடிஐ

அரசியல் சதி போன்ற வார்த்தைகளை விவசாயிகளுக்காகப் பயன்படுத்துவதை ஒரு பாவகரமான செயலாக நான் கருதுகிறேன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் புதுடெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

சமீபகாலமாக சோனியா காந்தி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வரும் வேளையில், ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு புறப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளார் என்று மட்டுமே தகவல் தெரிவிக்கிறது. எந்த நாட்டுக்கு ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார் என்று தெரிவிக்கவில்லை. ஆனால், மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தி, தனது தனிப்பட்ட பயணமாக இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

கட்சியின் 136-வது நிறுவன தினத்தில் இரு முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்ளாத நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:

''விவசாயிகளின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். விவசாயிகள் டெல்லி எல்லைகளில் நடத்திவரும் போராட்டத்தை அரசியல் சதி என்று கூறக்கூடாது. இது ஒரு அரசியல் சதி என்று சொல்வது முற்றிலும் தவறு. இந்த வார்த்தைகளை விவசாயிகளுக்காகப் பயன்படுத்தப்படுவது ஒரு பாவம் என்று நான் நினைக்கிறேன்.

அரசாங்கம் விவசாயிகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுடன் பேச வேண்டும். அத்துடன் விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் ஜவான்கள் அனைவரும் விவசாயிகளின் மகன்கள் ஆவர். விவசாயிகள்தான் நாட்டுக்கு உணவு கொடுப்பவர்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT