நாகாலாந்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகாலாந்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மாநிலத்தின் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே 25ஆம் தேதி அன்று பதிவானது. சென்னையிலிருந்து இம்மாநிலத்திற்குத் திரும்பியவர்களிடையே முதல் மூன்று பேருக்கு முதன்முறையாக கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்தது.
மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 11,897 ஆக உள்ளது. இதில் 251 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்புக்கு உட்பட்டவர்களில் இதுவரை 11,438 பேர் குணமடைந்துள்ளனர். 78 பேர் பலியாகியுள்ளனர். 130 பேர் பிற மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்தனர். இதனை சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் டெனிஸ் ஹேங்சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது வைரஸ் தாக்கம் குறைந்துவருவது குறித்து தலைநகர் கொஹிமாவின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
''நாகாலாந்தில் 72,328 ஆர்டி-பி.சி.ஆர், 36,652 ட்ரூநாட் மற்றும் 10,733 விரைவான ஆன்டிஜென் சோதனைகள் உட்பட 1.19 லட்சம் கோவிட் -19 சோதனைகளை அரசு இதுவரை நடத்தியுள்ளது.
டிசம்பர் 27 அன்று 23 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் மூலம் மாநிலத்தில் உள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தோர் விகிதம் 96.14 ஆக உயர்ந்துள்ளது.
டிமாபூரில் அதிக எண்ணிக்கையிலான அளவில் 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொஹிமாவில் 85 பேருக்கும், மோகோக்சுங் பகுதியில் 47 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.
நாகாலாந்தில் டிசம்பர் 27 அன்று எந்தவொரு புதிய கோவிட் -19 பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை''.
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.