புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், கடந்த 3 நாட்களாக ஹரியாணா சுங்கச்சாவடிகளை கைப்பற்றி, கட்டண வசூலை தடுத்துள்ளனர். தடுப்புகளை முழுமையாக அகற்றியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து ஹரியாணாவின் கர்னாலில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறும்போது, "எங்களது சுங்கச்சாவடியை நாளொன்றுக்கு 40,000 முதல் 50,000 வாகனங்கள் கடந்து செல்லும். இதன்மூலம் தினமும் ரூ.1.20 கோடி முதல் ரூ.1.30 கோடி வரை கட்டணம் வசூல் செய்யப்படும். விவசாயிகளின் போராட்டத்தால் சுங்கச்சாவடிகளின் வசூல் முடங்கும்" என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, "விவசாயிகளின் போராட்டத்தால் இழப்பை சந்திக்கும் சுங்கச்சாவடி கட்டண வசூல் நிறுவனங்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்" என்று தெரிவித்தார்.