உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் நடந்த படுகொலைச் சம்பவம் குறித்த ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கம் கொண்ட கருத்துக்களை நீக்குமாறு, ட்விட்டர் நிறுவனத்தை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தாத்ரியில் நடந்த படுகொலைச் சம்பவம் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சினையைத் தூண்டும் வகையிலான பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுவதால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக புகார் ஒன்றையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். நொய்டாவிலிருந்து இயக்கப்படும் ட்விட்டர் பக்கத்தில் மத நல்லிணக்கத்துக்கு தொந்தரவு அளிக்கும் விதத்திலும், வெறுப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தோடும் பதிவுகள் தொடர்ந்து எழுதப்படுவதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார். அத்துடன், சர்ச்சைக் கருத்துகளை வெளியிடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்டிருப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தவறான கருத்துக்களை பரப்ப போலி கணக்குகள் பல புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது குறித்து மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.
மேலும், சர்ச்சை உண்டாக்கும் வகையிலான கருத்துக்களை கண்டால் 9454401002 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம் என்றும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி தாலுகாவில் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்து மாட்டிறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தையொட்டிய நிகழ்வுகள் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.