மத்திய மகளிர் மற்றம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய மகளிர் ஆணையத்தில் தன்னை உறுப்பினராக்க ரூ.1 கோடியை லஞ்சமாகக் கேட்டதாக சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை ரித்திகா சிங், உ.பி.யின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு முற்றிலும் பொய்யானது; அரசியல் பின்னணி உள்ளது என்று மத்திய அமைச்சரின் சட்ட ஆலோசகர் கிராத் நக்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரித்திகா சிங் தனது மனுவில், ''மத்திய அமைச்சர் ஸ்மிருதியின் உதவியாளர் விஜய் குப்தா, மருத்துவர் ரஜ்னீஷ் ஆகியோர், மத்திய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி என்னிடம் ரூ.1 கோடி கேட்டனர். பின்னர் ரூ.25 லட்சமாகக் குறைத்துக் கேட்டனர். போலி நியமனக் கடிதம் ஒன்றையும் தந்தனர். மேலும் அதில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசினார்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஸ்மிருதி இரானியின் சட்ட ஆலோசகர் கிராத் நக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
''நாம் பத்திரிகைகளில் சில ஜோடிக்கப்பட்ட வழக்குகளைப் படிப்பதுபோல, ஒரு அமைச்சருக்கு அவதூறு விளைவிக்கும் முயற்சியில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை ரித்திகா சிங் தொடர்ந்துள்ள இந்த வழக்கு மிகவும் வினோதமான பொய்களின் தொகுப்பு.
இந்த நபரின் அதிகாரபூர்வ ஆவணங்களின் மோசடிகளும் இதில் அடங்கும். எனது வாடிக்கையாளருக்கு அவதூறு கற்பிப்பதற்கும், அவரது புகழுக்குக் களங்கம் விளைக்கவும் செய்யப்பட்ட சில அரசியல் சக்திகளால் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சி இது.
நன்கு பழக்கப்பட்ட ஒரு குற்றவியல் நபரால் விளம்பரம் தேடுவதற்கு ஒரு தீங்கிழைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வழக்குக்குப் பின்னால் பெரிய அரசியல் சதி உள்ளது.
சட்டத்தில் கிடைக்கக்கூடிய சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தீர்வுகளைப் பெறுவது உட்பட இதற்கு சரியான சட்ட உதவிகளை ஸ்மிருதி இரானி பெறுவார்''.
இவ்வாறு கிராத் நக்ரா தெரிவித்துள்ளார்.