கடந்த 2016 நவம்பரில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இருப்பு செய்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமாக டெபாசிட் செய்யப்பட்ட கணக்குகளை வருமான வரித் துறை ஆராய்ந்தது. அப்போது, சதாரா பகுதியைச் சேர்ந்த 35 வயதான கவுரவ் சிங்கால், போலி ஆவணங்கள் மூலம் வேறு வேறு பெயர்களில் 7 வங்கி கணக்குகளைத் தொடங்கி நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை ரூ.9 கோடியை டெபாசிட் செய்தது தெரிய வந்தது. அதன்பிறகு மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து வங்கி கணக்குகளிலும் கொடுக்கப்பட்ட மொபைல் எண், கவுரவ் சிங்கால் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித் துறை அதிகாரி ராஜேஷ் குமார் குப்தா அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் கவுரவ் சிங்காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.