புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் போராட்டத்திற்குத் தீர்வு காணப்படாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த 24ஆம் தேதி அன்று ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றனர்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இரண்டு கோடி கையொப்பங்களைக் கொண்ட ஆவணத்தைச் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் குடியரசுத் தலைவரிடம் சொன்னேன். இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுந்து நிற்பதை நாடு கண்டிருக்கிறது" என்றார்.
இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைகளின் நிலை குறித்து உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன், ''மண்ணின் துகள் சலசலக்கிறது; விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.