அசோக் கெலாட் | கோப்புப் படம். 
இந்தியா

தேர்தலில் முஸ்லிம்களுக்கு சீட்டுதருவது கிடையாது; ஆனால் அவர்களை வைத்தே எனது ஆட்சியைக் கவிழ்க்க சதிதிட்டம்: பாஜக மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு

பிடிஐ

தேர்தலில் முஸ்லிம்களுக்கு சீட்டு தராத பாஜக அவர்களை வைத்தே தனது ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டத்தில் ஈடுபடுவதாக அசோக் கெலாட் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்த கெலாட் செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏஐசிசி பொதுச் செயலாளர் அஜய் மக்கான், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, மாநில அமைச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசாக் கெலாட் இதுகுறித்து கூறியதாவது:

கடந்த ஜூலை மாதம் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழுவால் ஒரு கிளர்ச்சியை நடத்தினார். அப்போது பாஜக மாநிலங்களவை எம்.பி. சையத் ஜாபர் இஸ்லாம் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் கிளர்ந்தெழுந்த பின்னர் அப்போது ஏற்பட்ட எங்கள் இரு பிரிவுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தலையிட்டது. உண்மையில் சச்சின் பைலட்டின் கிளர்ச்சியை மறக்கவும் மன்னிக்கவுமே விரும்புகிறேன்.

அதேபோல சையத் ஜாபர் இஸ்லாம் அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் நடத்திய சதித்திட்டங்கள் பற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை. ஆனால் பாஜக தலைமையே ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் ராஜஸ்தானில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

பிஹார் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஒரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு கூட பாஜக டிக்கெட் வழங்கவில்லை, ஆனால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்த ஒரு முஸ்லிம் பயன்படுத்தப்படுகின்றார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் கவலைகள் குறித்து பாஜக அரசு அக்கறை காட்டவில்லை. எங்கள் மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுடனான சந்திப்புகளின் "கிசான் சம்வத்" திட்டத்தை திங்களன்று தொடங்கவுள்ளோம்.

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT