இந்தியா

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி: காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் இத்தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இப்போதிலிருந்தே கடுமையான போட்டி உருவாகியுள்ளது. இக்கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைப்பது குறித்து பேசி வந்தன.

இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்தது. இதற்கு அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஒப்புதல் அளித்தாலும் மத்தியக் குழு இறுதி முடிவு எடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபரில் மத்தியக் குழு இதற்கு ஒப்புதல் அளித்தது.

SCROLL FOR NEXT