இந்தியா

டெல்லியில் போராடும் விவசாயிகளை மிரட்டிய இந்துத்துவா பெண் செயற்பாட்டாளர் மீது வழக்கு

ஆர்.ஷபிமுன்னா

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர,விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு முயன்று வருகிறது. இச்சூழலில், டெல்லியைச் சேர்ந்த ராகினி திவாரி, கடந்த 12-ம் தேதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

இந்துத்துவா செயற்பாட்டாளர் எனக் கூறிக் கொள்ளும் அந்தப் பெண் இந்த வீடியோவில், “சகோதர, சகோதரிகளே, டிசம்பர் 17 அன்று தயாராக இருங்கள். விவசாயப் போராட்டத்தில் இருந்து டெல்லிவாசிகளை மத்திய அரசு விடுவிக்காவிட்டால், இந்த ராகினி மீண்டும் ஒரு ஜாபராபாத்தை ஏற்படுத்துவாள். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசும் டெல்லி காவல் துறையினரும் பொறுப்பாவார்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் வைரலான அந்த வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி ஜாபராபாத் காவல் நிலையத்தார் ராகினி மீது கலவரத்தை தூண்ட (ஐபிசி 153 பிரிவின் கீழ்) முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் விசாரணைக்காக சம்மன்அனுப்பியும் ராகினி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரது ஜாபராபாத் வீட்டிற்கு போலீஸார் சென்றபோது அவர் அங்கு இல்லை.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு டெல்லியின் ஜாபராபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராகப் போராட வேண்டி,டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவரான கபில் மிஸ்ரா கடந்த பிப்ரவரி 23-ல் அனைவரும் ஜாபராபாத்தின் மோஜ்பூர் பகுதிக்குவருமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து கூடியவர்கள் முன்பாக கபில் மிஸ்ராவின் சர்ச்சைக்குரிய உரையால் கலவரம் மூண்டது. இது டெல்லியின் பல பகுதிகளில் மதக்கலவரமாகி50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதேபோன்ற கலவரத்தை விவசாயிகள் போராட்டப் பகுதியிலும் நடத்த இருப்பதாக ராகினிஎச்சரித்திருந்தார். இதனால், விவசாயிகள் குறித்த தனது வீடியோவில் குறிப்பிட்ட ராகினிக்கு ஜாபராபாத் கலவரத்திலும் தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT