டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியில் ஏழை, எளிய மக்கள் சாப்பிடுவதற்காக ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மக்கள் கேண்டீனை பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் நாளை திறந்து வைக்க உள்ளார்.
டெல்லி கிழக்குத் தொகுதியில் உள்ள காந்திநகர் பகுதியில் நாளை முதல் ஜன் ரசோய் எனப்படும் மக்கள் கேண்டீனை கம்பீர் திறந்து வைக்கஉள்ளார். அதன்பின் குடியுரசத் தினத்தன்று,அசோக் நகரில் மற்றொரு மக்கள் கேண்டீனையும் கம்பீர் திறக்க உள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் நிருபர்களிடம் கூறுகையில் “ கிழக்கு டெல்லி தொகுதியில் ஏழை, எளிய மக்கள் சாப்பிடும் வகையில் காந்திநகர் பகுதியில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மக்கள் கேண்டீன் நாளை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து குடியரசுத் தினத்தன்று அசோக் நகரில் மற்றொரு மக்கள் கேண்டீன் திறக்கப்படும்.
சாதி,மதம், நிதிச்சூழல் ஆகியவற்றை பாராமல் அனைத்து மக்களுக்கும் சத்தான, சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டும் என எப்போதும் நான் நினைப்பேன். ஆனால் வீடில்லாத மக்கள், சாலையில் வசிப்போர், 2 வேளை உணவுகூட சாப்பிடமுடியாமல் பட்டினியாக இருப்பது எனக்கு வருத்தமாக இருந்தது.
ஆதாலால் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் கேண்டீனை திறக்கத் திட்டமிட்டேன். என் தொகுதிக்கு உட்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு மக்கள் கேண்டீனை திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இருக்கிறேன். லாக்டவுன் காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, சாப்பிட வழியில்லாமல் நடந்தே சொந்த ஊருக்குச் செல்வதைப் பார்த்தேன். அவர்கள் பசி தீர்க்கும் வகையில்தான் இந்த கேண்டீன் திறக்கப்படுகிறது “ எனத் தெரிவி்த்தார்.
இதுகுறித்து கம்பீர் அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில், “ நாட்டின் மிகப்பெரிய மொத்த துணிக்கடை இருக்கும் பகுதி காந்திநகர் பகுதியாகும். இங்கு மக்களுக்கு நாளை முதல் ஒரு ரூபாயில் மதிய உணவு கிடைக்கும். இந்த கேண்டீனில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உண்ணமுடியும்.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக 50 பேர் மட்டுமே உணவு சாப்பிடமுடியும். மதிய உணவில் அரிசி சாதம், பருப்பு, காய்கறிகள் இடம்பெறும். இந்த கேண்டீனுக்குத் தேவையான நிதி கம்பீரின் அறக்கட்டளையும், எம்.பி. நிதியிலிருந்தும் பெறப்படுகிறது. அரசின் உதவி ஏதும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.