டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக போராட்டக்காரர்களிடம் தொலைபேசியில் பேசியபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் நடத்தி வரும் போராட்டம் 28-வது நாளை எட்டியுள்ளது.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
போராடி வரும் விவசாயிகளை சந்திக்க விவசாயிகள் தினமான இன்று விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதைக் காட்ட அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி வந்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக எம்.பிக்கள், டெரெக் ஓ'பிரையன், சதாப்தி ராய், பிரசுன் பானர்ஜி, பிரதிமா மொண்டல் மற்றும் எம்.டி.நதிமுல் ஹக் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு புதன்கிழமை சிங்கு எல்லையில் விவசாயிகளை சந்தித்தனர்.
திரிணமூல் எம்.பிக்கள் போராட்டக் களத்திற்கு வருகை தந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, "முழு நாட்டிற்கும் உணவளிக்கும் விவசாயிகள் பசியுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. திரிணமூல், புதிய விவசாய மசோதாக்களை ரத்து செய்வதற்கான விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சில விவசாயிகள் டெல்லியில் போராட்டக் களத்தை நேரில் வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டனர். மம்தா பானர்ஜி போராடும் விவசாயிகளுடன் தொலைபேசியில் பேசுவது ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.