உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்று இரவு முதல் 2021, ஜனவரி 2-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், கரோனாவுக்கான மாநில தொழில்நுட்ப ஆலோசனக் குழுவினருடன் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா ஆலோசனை நடத்தியபின் இந்த முடிவை அறிவித்தார்.
உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கை அறிவிக்கும் 2-வது மாநிலம் கர்நாடகமாகும். மகாராஷ்டிரா மாநிலம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை முக்கிய நகரங்களில் இரவு நேர ஊடரங்கை ஜனவரி 5-ம் தேதி வரை அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பெங்களுருவில் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உருமாறிய கரோனா வைரஸைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரை, தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை ஏற்றும் மாநிலத்தில் இன்று இரவு 10 மணி முதல் 2021, ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இது மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.மக்கள் அனைவரும் ஒத்துழைத்து உருமாறிய கரோனா வைரஸ் பரவலாமல் தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்குள் வருவோர் கண்டிப்பாக பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிக்க விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை செய்யாமல் யாரும் நகருக்குள் நுழைய முடியாது. காலை 6மணி முதல் இரவு 10மணிவரை மக்கள் சுதந்திரமாக அனைத்துப் பணிகளையும் கவனிக்கலாம். ஆனால், இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை கட்டுப்பாடுகள் இருக்கும், விரைவில் இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்.
பள்ளிகள்,கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்தோம். அதன்படி, ஜனவரி 1-ம் தேதி அன்று 10-ம் வகுப்புக்கும், 12-ம்வகுப்புக்கும் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. வேறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், பின்னர் தெரிவிக்கப்படும் ” எனத் தெரிவித்தார்.