ஜம்மு காஷ்மீரில் நடந்த மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான குப்கர் கூட்டமைப்பு 110 இடங்களில் வென்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக 74 இடங்களில் வென்றுள்ளது.
வடக்கு காஷ்மீரில் உள்ள பந்திப்போரா, குப்வாரா, பூஞ்ச், ராஜோரி மாவட்டத்தில் இன்னும் 4 இடங்களுக்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதல்முறையாக மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் கடந்த நவம்பர் 28 முதல் டிசம்பர் 19-ம் தேதிவரை 8 கட்டங்களாக நடந்தது.
இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டுக்கட்சி, பிடிபி கட்சி தலைமையில் குப்கார் கூட்டமைப்பு போட்டியிட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்போம் என்ற அறைகூவலுடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன.
மொத்தம் 20 மாவட்டங்களில் தலா 14 தொகுதிகளில் தேர்தல் முடிந்து நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 280 இடங்களில் இதுவரை 276 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில்7 கட்சிகள் கூட்டணி கொண்ட குப்கர் கூட்டமைப்பு 110 இடங்களில் வென்றுள்ளது, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக 74 இடங்களிலும், சுயேட்சைகள் 49 இடங்களிலும் வென்றுள்ளன. இது தவிர காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும், அப்னி கட்சி 12 இடங்களிலும், பிடிஎப் மற்றும் தேசிய பாந்தர் கட்சி தலா 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சிஒரு இடத்திலும் வென்றுள்ளன.
குப்கர் கூட்டமைப்பில் உள்ள தேசிய மாநாட்டுக்கட்சி 67 இடங்களிலும், அதைத் தொடர்ந்து மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 27 இடங்களிலும், மக்கள் மாநாட்டுக் கட்சி 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் 3 இடங்களிலும் என110 இடங்களில் 3.94 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளன.
பாஜக 74 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதில் முதல்முறையாக காஷ்மீரில் 3 இடங்களில் வென்று 4.87 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. ஜம்மு பகுதியில் உள்ள ஜம்மு, கதுவா, உதம்பூர், சம்பா, தோடா, ரேஸாய் ஆகிய மாவட்டங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது.
பீர் பாஞ்சல், செனாப் பள்ளத்தாக்கில் இருக்கும் கிஷ்தாவர், ராம்பன் மாவட்டங்களில் தேசிய மாநாட்டுக்கட்சி தலா ஒரு இடத்தில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மொத்தம் 1.39 லட்சம் வாக்குகளையும், சுயேட்சைகள் 1.71 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன.