ஊடகங்களில் பாஜகவுக்கு எதிராக கட்சி விரோத அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி மேற்கு வங்க பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசுவுக்கு கட்சி செவ்வாய்க்கிழமை காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசியதலைவருமான அமித்ஷா மேற்குவங்கத்திற்கு வருகை தந்தபோது திரிணமூல் காங்கிரஸின் பல தலைவர்களும் எம்எல்ஏக்களும் எம்.பி ஒருவரும் அவர் முன்னிலையில கட்சியில் இணைந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் பாண்டேஸ்வர் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிதேந்திர திவாரியும் கட்சியை விட்டு வெளியேறும் நோக்கில் தனது அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்திருந்தார், மேலும் அவர் பாஜகவில் சேர்ப்பது குறித்து ஊகங்கள் எழுந்தன.
திவாரி, பாஜகவில் சேர்க்கப்படுவதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. திவாரி பாஜகவில் சேர்க்கக்கூடாது என்று பாசு பேசியதாக மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. பாசு மட்டுமின்றி மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட பாஜகவின் மாநிலப் பிரிவின் உயர்மட்ட நிர்வாகிகளும் ஜிதேந்திர திவாரி கட்சியில் சேர்க்கப்படுவதை எதிர்த்தனர்.
இதைத் தொடர்ந்து ஜிதேந்திர திவாரி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, மன்னிப்பு கேட்டு திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.
இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு ஊடகங்களிடம் பேசியபோது, பாஜகவை விமர்சனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து சயந்தனுக்கு விளக்கம் கேட்டு கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பாஜகவின் துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி கூறுகையில், ''கடந்த வாரம் பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு, பாஜகவுக்கு எதிராக சில கட்சிவிரோத கருத்துக்களை பேசியுள்ளார். தான் சார்ந்த கட்சியை விமர்சித்து அதற்கு எதிராகவே பேசிய கருத்துக்களுக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சயந்தனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
இது தொடர்பாக பாசுவை தொடர்பு கொண்டபோது, அவர் பிடிஐயிடம் கூறுகையில் ''கருத்து தெரிவித்ததற்காக கட்சித் தலைமைக்கு முன்பே விளக்கம அனுப்பியுள்ளேன். நான் கட்சியின் விசுவாசமான சிப்பாய். எனது கருத்துக்கள் ஏதேனும் கட்சியை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படி நான் ஏற்கனவே கட்சிக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்'' என்றார்.