புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லி வருகின்றனர்.
பஞ்சாபின் பாரித்காட் மாவட்டம், ராமேனா கிராமத்தை சேர்ந்த பால் சாந்து (45), தனது கிராமத்தில் இருந்து 400 கி.மீ. சைக்கிள் மிதித்து டெல்லியின் திக்ரி எல்லைப் பகுதியை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது சக விவசாயிகள் கடும் குளிரில் டெல்லியில் போராடும்போது என்னால் எனது கிராமத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்னிடம் டிராக்டர் இல்லை. எனவே கடந்த 19-ம் தேதி வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டேன். காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை சைக்கிள் மிதிப்பேன். எனது சைக்கிளில் விவசாய சங்கத்தின் கொடியை பறக்க விட்டிருந்தேன். இதை பார்த்த கிராம மக்கள் வரும் வழியில் எனக்கு உணவும் குடிநீரும் வழங்கினர். கடந்த திங்கள்கிழமை மாலையில் டெல்லியின் திக்ரி பகுதியை வந்தடைந்தேன்.
எனது மனைவியும், மகனும் வீட்டில் உள்ளனர். அவர்களை கடவுள் பார்த்து கொள்வார். சக விவசாயிகளோடு இணைந்து நானும் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று தெரிவித்தார்.
டெல்லியை அடைந்த விவசாயி பால் சாந்துவுக்கு அனைத்து விவசாயிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.