இந்தியா

திருமணத்தை மறைத்த விவகாரம்: மோடிக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

பிடிஐ

2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் திருமண உறவு நிலை குறித்து தவறான தகவல் அளித்தது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த நிசாந்த் வர்மா என்பவர் 2014 ஏப்ரலில் மோடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

2012-ம் ஆண்டு வேட்பு மனு பிரமாண பத்திரத்தில், தனக்கு யசோதாபென்னுடன் திருமணமானதை நரேந்திர மோடி மறைத்து விட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி பொய்தகவல் கூறிய நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இம்மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மிக தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என கூறி விட்டது. குஜராத் உயர் நீதிமன்றமும் கடந்த ஜூலையில் நிராகரித்து விட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிசாந்த் வர்மா மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT