மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. சவுமித்ரா கானின் மனைவி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நேற்று சேர்ந்தார். இதையடுத்து, மனைவியை விவாகரத்து செய் யப்போவதாக எம்.பி. சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் தேர்தலை சந்திக்க தீவிரமாக களம் இறங்கி உள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இருந்து கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள்விலகினர். கடந்த சனிக்கிழமையன்று மேற்கு வங்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாமுன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது. பாஜக எம்.பி. சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான் நேற்று பாஜகவில் இருந்து விலகினார். பின்னர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் மற்றும் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் ஆகியோர் முன்னிலையில் சுஜாதா அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் எனது கணவர் வெற்றிபெறநான் கடுமையாக உழைத்தும் எனக்கு பாஜகவில் அங்கீகாரம்கிடைக்கவில்லை. பாஜகவில்புதிதாக இணைந்த தகுதியில் லாத ஊழல்வாதிகளுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. என் கணவரின் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து அவரே முடிவு செய்வார். அவர் ஒருநாள் உண்மையை உணர்வார். திரிணமூல் காங்கிரஸுக்கு கூட அவர் திரும்பலாம்’’ என்றார். பாஜக இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் சவுமித்ரா கான் ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாஜக எம்.பி. சவுமித்ரா கான் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சுஜாதா மொண்டல் மிகப் பெரிய தவறு செய்து விட்டார். கான் என்ற எனது பெயரை அவர் தனது பெயருடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது. பாஜகவின் பெயரால்தான் நான் வெற்றி பெற்றேன். விரைவில் சுஜாதா மொண்டலை விவகாரத்து செய்வேன். விவாகரத்து பெறுவதற்கான நோட்டீஸ் அனுப்புவேன்’’ என்றார்.