தசரா பேரணிக்கு கிடைத்த வெற்றி, எதிர்காலம் சிவசேனா கையில் உள்ளது என்பதை நிரூபித்துவிட்டது. தேவைப்பட்டால் அடுத்த தேர்தல்களை தனித்து நின்றே எதிர்கொள்ளத் தயார் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.
அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஆட்சி அதிகாரம் என்ற வடிவத்தில் “மோடி ஆக்சிஜன்” பாஜகவுக்கு கிடைத்துள்ளது. மக்களின் ஆதரவு சிதையாமல் இருக்கும் காலம் வரை இது நீடிக்கும்.
தமது சிந்தனைகள், போராட்டம், தேசபக்தி ஆகிய வற்றில் சிவசேனாவின் நிலைப் பாடு மாறாது. இந்துத்துவா, தேச பக்தி, மகாராஷ்டிரா அடையாளம், பாமர மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தமது நிலைப் பாட்டை சிவசேனா எப்போதும் மாற்றிக்கொண்டதில்லை. இதில் என்ன வந்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டோம். நாட்டின் எதிரிகளை எதிர்த்து நிற்கிறது சிவசேனா. யாரும் எங்களுக்கு சவால் இல்லை. மக்களின் ஆதரவால் எதிர்காலத்தில் மகாராஷ்டிரத்தில் சிவசேனா கொடி பறக்கும்.
எதிர்காலம் சிவசேனா கையில் இருக்கும். கட்சி தரப்பில் நடத்திய தசரா ஊர்வலம் இதை அனைவருக்கும் உணர்த்திவிட்டது. எங்களுடன் இணைய விரும்பி யார் வந்தாலும், யாரும் வராவிட்டாலும் நம்பிக்கையுடன் தனித்து நின்று போராடுவோம்.
டெல்லியில் இப்போது வேலை இல்லாததால் சரத் பவார் புது திட்டம் போடுகிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் நெருக்கம் வைக்கிறார். வயது முற்றுவதால் பவாரின் அரசியலும் இப்போது சரிவு காண்கிறது. அவரது அரசிய லுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய தில்லை. அவர் எப்போது மதச்சார்பற்றவராக இருப்பார், பாஜகவை எப்போது பாராட்டுவார் என்பது யாருக்குமே தெரியாது.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. காங்கிரஸ் தலைவர்களோ தொண்டர்களோ இல்லாததால் அந்த கட்சிக்கு ஓட்டு போட வாக்காளர்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.