மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் டெல்லியில் இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

பிரிட்டனில் பரவும் புதியவகை கரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை; அரசு எச்சரிக்கையுடன் இருக்கிறது: ஹர்ஷ்வர்த்தன் தகவல்

பிடிஐ

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸின் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, மத்திய அரசு விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்று இரவு முதல் விதித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “புதியவகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வைரஸால் உயிரிழப்பு எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு எச்சரித்துள்ளோம்.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அழைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பிரிட்டனில் பரவி வரும் கரோனா வைரஸின் புதிய வகையால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப் பட வேண்டுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஹர்ஷவர்த்தன் பதில் அளிக்கையில் “ மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக கரோனா வைரஸ் சூழலை கையாள்வது குறித்து அரசு நன்கு அறிந்துள்ளது. அரசு மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருப்பதால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

இந்த கற்பனை சூழல், கற்பனைப் பேச்சு, கற்பனையான அச்சம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொன்றையும் பற்றி அரசு முழுமையாக அறிந்துள்ளது. என்னிடம் நீங்கள் கேட்டால், இதில் அச்சம் கொள்வதற்கு எந்தவிதமான காரணம் இல்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT