கோப்புப்படம் 
இந்தியா

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: விவசாயிகளுக்கு மத்திய அரசு கடிதம்

பிடிஐ

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 25 நாட்களாகப் போராடிவரும் விவசாயிகளுடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக தேதி கேட்டு, விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லையை முடக்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாள்தோறும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் இணைந்து வருகின்றனர்.

கடும் வெயிலிலும், உறையவைக்கும் குளிரிலும் போராட்டம் நடத்தும் விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் தீர்வு என்று தீர்மானமாக இருக்கின்றனர். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த பின்பும் எந்தத் தீர்வும் எட்டவில்லை.

வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும், குறைந்தபட்ச ஆதார விலை அகற்றப்படாது என்று மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளித்தும் அதை ஏற்க விவசாயிகள் சங்கத்தினர் தயாராக இல்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் குறைகள், கவலைகள், சந்தேகங்களைக் கூறினால், அடுத்தககட்டப் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான தேதியைக் குறிக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி விஞ்ஞான் பவனில் நடத்தலாம். விவசாயிகள் சார்பில் பரந்த மனதுடன் வைக்கப்படும் அனைத்துப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் தீர்க்க அரசு தயாராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், ஹரியாணாவிலிருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி சுங்கச்சாவடி வசூலை நிறுத்தப்போவதாகவும் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT