பிரிட்டனில் கரோனா வைரஸில் புதியவகை வேகமாகப் பரவிவருவதையடுத்து அதுகுறித்து ஆலோசனை நடத்த கூட்டுக் கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்று இரவு முதல் விதித்துள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் கரோனா வைரஸ் புதிய வகை வேகமாகப் பரவிவருவதையடுத்து, அதுகுறித்து ஆலோசிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “பிரிட்டனில் கரோனா வைரஸில் புதியவகை வேகமாகப் பரவி வருவது குறித்து ஆலோசிக்க, சுகாதாரச் சேவை இயக்குநர் தலைமையில் கூட்டுக் கண்காணிப்புக் குழு திங்கள்கிழமை காலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் உலக சுகாதாரத்துறை அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் ரோட்ரிக்கோ ஹெச் ஆப்ரின் பங்கேற்பார் எனத் தெரிகிறது” எனத் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “புதியவகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வைரஸால் உயிரிழப்பு எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு எச்சரித்துள்ளோம்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அழைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.