ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியின் கட்டுமானப் பணி தடங்கல் ஏதும் இன்றி சிறப்பாக நடைபெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக முதல்வர் சந்திர பாபு நாயுடு நேற்று தெரிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் அவர் தனது பேரன் தேவாஷனுக்கு கோயில் வளாகத்தில் சாஸ்திரப்படி‘அன்ன பிரசன்னம்’ செய்தார். இதில் முதல்வரின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராம்மனி, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் திருமலையில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு பக்தர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பிறகு அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தலைநகருக்காக திருமலையில் உள்ள புனித நீர், மண் அகியவைகளை சேகரித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். பின்னர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் 22-ம் தேதி புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதன் பணிகள் எந்தவித தடையும், தடங்கலும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என எல்லாம் வல்ல ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். அமராவதிக்காக நாடு முழுவதிலும் இருந்து புனித நீர், மண் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போன்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்களால் ஆன நிதி உதவியை செய்து வருகின்றனர்.
உலகத்தரத்தில் அமைய உள்ள தலைநகருக்காக நம் நாட்டில் உள்ள அனைத்து நதிகளில் இருந்தும், பல மாநில தலைநகர்களில் இருந்தும்புனித நீர், மண் அனுப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் பலர் புனித மண், நீரை அனுப்புகின்றனர். மக்களின் இந்த ஆதரவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.