விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஒரு கோடி 29 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வாங்கியுள்ளோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் ஜமுனியா கிராமத்தில் நடைபெற்ற மாநிலத்தில் வெல்ஸ்பன் குழுமத்தின் நவீன கட்டுமானச் சேவைகளின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவ்ராஜ் சிங் சவுகான் கட்டுமானச் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஊரடங்கின் மோசமான விளைவுகளைக் குறைக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தொழில்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் மாநிலத்தில் உள்ளன. கரோனா நெருக்கடியை மாற்றிக் காட்டும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையின்கீழ் ஒரு தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ம.பி. அரசு ஈடுபட்டு வருகிறது.
மாநிலத்தில் தொழில்துறை முதலீடுகளுக்கு அரசாங்கம் அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது. வெல்ஸ்பன் குழுமம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வளர்ந்த மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற நாடுகளின் எல்லையாக இருக்கும் நாட்டின் மையப்பகுதியாக நமது மாநிலம் உள்ளது. மத்தியப் பிரதேசம் இன்று தானியங்களின் களஞ்சியமாக உருவெடுத்துள்ளது.
பஞ்சாப்பைப் பின்னுக்குத் தள்ளி ம.பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஒரு கோடி 29 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வாங்கியுள்ளோம். இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
விவசாயத்தைப் பொறுத்தவரை நர்மதா தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்த நமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது''.
இவ்வாறு சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.