இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாக். மீனவர்களை குஜராத் கடற்கரையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளது. அவர்கள் வந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை:
''சனிக்கிழமை மாலை சர் கிரீக் பொதுப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். மாலை 5.50 மணியளவில், கடல்சீற்றம் மற்றும் மந்தமான வானிலையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் மீன்பிடிப் படகு ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்ததைக் கவனித்தனர். எச்சரிக்கை அடைந்த பாதுகாப்புப் படை, இரு பாகிஸ்தான் மீனவர்களைக் கைது செய்து படகையும் கைப்பற்றியது.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் காலித் உசேன் (35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 20 லிட்டர் டீசல் கொண்ட ஒரு ஜெர்ரிகேன், ஒரு மொபைல் போன், இரண்டு மீன்பிடி வலைகள், எட்டு பிளாஸ்டிக் நூல் பார்சல்கள் மற்றும் சில நண்டுகள் அவர் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவருடன் வந்த இன்னொரு நபரும் கைது செய்ப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு முழுமையான தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதுவரை சந்தேகத்திற்கிடமான எதுவும் மீட்கப்படவில்லை''.
இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.