வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச சொர்க்கவாசல் தரிசனத் துக்கு திருப்பதி பக்தர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர் என்றும் வெளியூர் பக்தர்கள் வர வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக வைகுண்டஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசிக்கு மட்டுமே சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால் இம்முறை முதன் முறையாக வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை ஏற்கெனவேஇணையதளத்தில் வெளியிட்ட தால் வரும் ஜனவரி 3-ம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். சில மணி நேரத்திலேயே இதற்கான டிக்கெட்டுகள் (நாளொன்றுக்கு 20,000) அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. மேலும் வாணி அறக்கட்டளை மூலம் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கென 10,000 டிக்கெட் கள் வழங்கப்பட்டு விட்டன.
தற்போது சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன டிக்கெட்களை பெற பக்தர்கள் நேரில் வந்து அலைமோதுவார்கள் என்பதால், இம்முறை திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே தினமும் 10,000 வீதம் பத்து நாட்களுக்கு ஒரு லட்சம் டிக்கெட்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக திருப்பதியில் 5 டிக்கெட் வழங்கும் மையங்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மையங்களை திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, திருப்பதி எஸ்.பி. ரமேஷ் ரெட்டி மற்றும் தேவஸ்தான உயரதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும் போது, "கரோனா பரவலை தடுக்கபல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் விற்பனை செய்து முடித்து விட்டதால், இலவச தரிசனத்துக்கு மட்டுமே தினமும் 10,000 வீதம் திருப்பதியில் உள்ள 5 மையங்களில் டோக்கன்கள் வழங்கப்படும். இதில் திருப்பதி நகரவாசிகளுக்கு மட்டுமே ஆதார் அட்டை மூலம் டிக்கெட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இங்குஇலவச டிக்கெட்கள் வழங்கப்படமாட்டாது. ஆதலால் தயவுசெய்து பக்தர்கள் இதனைப் புரிந்துகொண்டு நேரில் இலவச தரிசன டிக்கெட்களை பெற திருப்பதிக்கு வரவேண்டாம்" என்றார்.