பிஹாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.
பிஹார் மாநில சட்டப்பேர வைக்கு 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி நடந்தது. அப் போது 57 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு 32 தொகுதிகளுக்கு நாளை 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
ஜெகனாபாத், அர்வால், கயா, ரோடாஸ், கைமூர், அவுரங்காபாத் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 32 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த 6 மாவட்டங்களும் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்தவை. தேர் தலை சீர்குலைக்க நக்ஸல்கள் திட்டமிட்டுள்ளதால், வாக்குப் பதிவு நேரத்தில் ஒரு மணி நேரத் தில் இருந்து 3 மணி நேரம் வரை குறைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, நக்ஸல்கள் மிரட்டல் உள்ள 12 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் 11 தொகுதிகளில் பிற் பகல் 3 மணி வரையும் வாக்குப் பதிவு நடைபெறும். மீதமுள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும் என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸுடன் மெகா கூட்டணி வைத்து களம் இறங்கி உள்ளது. பாஜக.வுக்கு கடும் போட்டி அளித்து வரும் நிலையில், ஐஜத.வின் மூத்த அமைச்சர் அவதேஷ் பிரசாத் குஷ்வாகா ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானது.
அந்த வீடியோவை வாக்காளர் களிடம் முன்வைத்து பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. குறிப்பாக 2-வது கட்ட தேர்தல் நடக்கும் ஜெகனாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, நிதிஷ், லாலுவை கடுமையாக சாடினார். லஞ்ச வீடியோவை குறிப்பிட்டு அவர் காரசாரமாக பேசினார். இதனால் ஐஜத கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.