மேற்கு வங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவரும், கேபினட் அமைச்சராக இருந்தவருமான சுவேந்து அதிகாரியுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் இன்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய சுவேந்து அதிகாரி பேசியதாவது:
''மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி ஆட்சியை அகற்றுவோம் என்று நான் சபதம் செய்கிறேன். மேற்கு வங்கத்தில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போவது பாஜகதான் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
2014 மக்களவைத் தேர்தலின்போது நான் முதன்முதலில் அமித் ஷாவைச் சந்தித்தேன். கோவிட்-19 வைரஸில் நான் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனது முன்னாள் கட்சியினர் கூட எனது உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. ஆனால், நான் எப்படி இருக்கிறேன் என்று அமித் ஷா இரண்டு முறை விசாரித்தார்.
பாஜக தேசியவாதம் மற்றும் பன்மைத்துவத்தை நம்புகிறது. திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலத்தில் வசிப்பவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறது. மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் வெளிமாநிலத்தவர் என்ற வகையிலும் பிரிக்க விரும்புகிறது. இதுபோன்ற குறுகிய அரசியல் நோக்கத்தோடு திரிணமூல் காங்கிரஸ் செயல்படுவது வெட்கமாக இருக்கிறது.
பாஜகவில் இணைந்ததால் என்னைத் திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் துரோகி என்று அழைக்கிறார்கள். பாஜக இல்லாதிருந்தால், திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் இருக்காது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தை வெல்லும். திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும்''.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவிததார்.