மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று பிரமாண்ட பேரணியில் பங்கேற்கிறார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் வந்தபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டபின் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதையடுத்து நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.
ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதியபின்பும் மம்தா அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
இந்த மோதல்களுக்கு இடையே பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்கம் வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் இன்று சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நவீனத்துவத்திற்கும், ஆன்மீகத்திற்கும் விவேகானந்தர் முன் மாதிரி எனக் கூறினார்.
இன்று மிட்னாப்பூர் செல்லும் அமித் ஷா, புரட்சியாளர் குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரு கோயில்களில் தரிசனம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்துக்கு இடையே விவசாயி ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிட உள்ளார், அதைத் தொடர்ந்து மிட்னாப்பூரில் பேரணியும் பாஜக சார்பில் நடைபெற உள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகிய மூத்த தலைவரும், கேபினட் அமைச்சராக இருந்தவருமான சுவேந்து அதிகாரி இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பாஜகவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சில்பேந்திர தத்தா, ஜிதேந்திர திவாரி இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தவிர பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.