கர்நாடக மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது அமைச்சரவையில் சித்தராமையாவின் ஆதரவாளர் களுக்கும் பெங்களூரு, மைசூருவை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே இடம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சர வையில் இடமளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே கர்நாடக மூத்த தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜுன கார்கே, ஜி.பரமேஷ்வர் ஆகி யோர் எம்.எல்.ஏக்கள் எண் ணிக்கையின் அடிப்படையில் மேலும் 4 பேரை அமைச்சரவை யில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்காத சித்தராமையா, ‘அமைச் சரவை விரிவாக்கம் தேவை யற்றது. அவ்வாறு செய்தால் பதவி கிடைக்காதவர்கள் ஆட்சிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் பிரச்சினையை கிளப்புவார்கள்' என்றார்.
எனினும் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தராமையாவை அழைத்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டார்.
எனவே சித்தராமையா தமது அமைச்சரவையில் 4 பேரை புதிய அமைச்சர்களாக சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண் டார். ஆனால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வ ருக்கு துணை முதல்வர் பதவியோ, உள்துறை அமைச்சர் பதவியோ வழங்க முடியாது. அவ்வாறு செய்தால் தனக்கு எதிராக செயல்பட்டு கட்சிக்கும் ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்துவார் என சித்தராமையா வாதிட்டுள்ளார்.
இதை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 2-வது முறையாக கர்நாடக அமைச்சரவை நேற்று விரி வாக்கம் செய்யப்பட்டது. அதன்படி 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பெங்களூருவில் உள்ள மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் உயர் கல்வித்துறை மற்றும் பெங்களூரு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அரக்கல்கூடு மஞ்சு (கலால்துறை), வினய் குல்கர்னி (சுற்றுலா வளர்ச்சித்துறை), மனோகர் தாசில்தார் (இந்து அறநிலையத் துறை) ஆகிய மூவரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற உபசரிப்பு விருந்து நிகழ்ச்சியில் சித்தராமையா பங்கேற்காமல் அங்கிருந்து உடனடியாக விலகினார். தனக்கு எதிராக செயல்பட்ட பரமேஷ்வர் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சித்தராமையா அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.