காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

டெல்லியில் அன்னா ஹசாரே ஊர்வலம்  செல்ல முடியும் என்றால், ஏன் விவசாயிகளால் முடியாது: காங்கிரஸ் கேள்வி 

பிடிஐ

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் ஊர்வலம் செல்ல முடியும் என்றால், ஏன் விவசாயிகளால் முடியாது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த 23 நாட்களாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினர் ஆதரவு கிடைத்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் காப் எனும் சமூகப் பஞ்சாயத்தாரும் இன்று முதல் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால், டெல்லியின் எல்லையில் கூடுதலாகப் பத்து லட்சம் பேர் குவிய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்னும்கூட போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லி நகரில் ஊர்வலம் செல்ல முடியும் என்றால், ஏன் விவசாயிகளால் முடியாது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஏஎன்ஐயிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லியில் ஊர்வலம் செல்ல முடியும் என்றால், ஏன் விவசாயிகளால் முடியாது. டெல்லியின் ராம் லிலா மைதானத்தில் போராட்டம் நடத்த அன்னா ஹசாரே அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி ஜியும் இதேபோன்ற விவசாயிகளின் போராட்டத்தை அவரது ஆட்சியில் கண்டார், அப்போது அவர்கள் ஒரு மாதமாக ஜனபத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு இந்த விவசாயிகளை டெல்லிக்குள் ஏன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை? சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் ஊர்வலம் செல்ல முடியும் என்றால், ஏன் விவசாயிகளால் முடியாது?

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு ரான் ஆஃப் கட்ச் விவசாயிகளுடன் பேசுவதற்கு நேரம் இருக்கிறது, ஆனால் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களுடன் நேரம் இல்லை. ரான் ஆஃப் கட்ச் விவசாயிகளுடன் மட்டும்தான் பேசுவேன் என்று குறிப்பிட்ட விவசாயிகளின் கவலைகளை தேர்ந்தெடுத்து நிவர்த்தி செய்பவராக ஒரு பிரதமர் இருக்கக்கூடாது.

இந்த கறுப்பு வேளாண் சட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விவசாயிகளின் போராட்டத்தின் நோக்கத்தையே களங்கப்படுத்த மத்திய அரசு முயற்சித்துவருகிறது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் விவசாயம் செய்யவில்லை. அதேபோல மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் விவசாயம் தெரியாது. அவர்கள் எவ்வாறு இந்த விவசாயிகளின் அவல நிலையை புரிந்துகொள்வார்கள்?

பியூஷ் கோயல் போராட்டக்காரர்களை நக்சல்வாடி என்று அழைக்கிறார், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களை காலிஸ்தானி என்று அழைக்கிறார், ஹரியானாவின் வேளாண் அமைச்சரோ போராட்டத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்திருப்பதாக கூறுகிறார்.

தயவு செய்து விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்துவதை அவமதிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT