மேற்கு வங்க அரசில் கேபினெட் அமைச்சராக இருந்தவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகியவருமான சுவேந்து அதிகாரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவுக்கு இரு நாட்கள் பயணமாக இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ளார். கொல்கத்தாவில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ மேற்கு வங்கத்தின் மூத்த அரசியல் தலைவர் சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சகம், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது.அந்த ஆலோசனையின் முடிவில் சுவந்து அதிகாரிக்கு சிஆர்பிஎஸ் பிரிவின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அமைச்சர் பதவியிலிருந்து அவர் அதிகாரி சமீபத்தில் விலகினார். கடந்த வியாழக்கிழமை தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்த அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதமும் எழுதினார்.
மேற்கு வங்கத்தில் நடந்த நந்திகிராம் இயக்கம்தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 2011-ல் ஆட்சியைப் பிடிக்க உதவியது. அந்தப் போராட்டத்தில் முக்கிய நபராக இருந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் கொண்டவர் அதிகாரி, அதனால்தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
சுவேந்து அதிகாரியின் தந்தை சிசர் அதிகாரி, சகோதரர் திப்யெந்து ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தம்லுக், காந்தி மக்களவைத் தொகுதி எம்.பி.க்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.