இந்தியா

‘‘விவசாயிகள் வதந்திகளை நம்ப வேண்டாம்’’- மத்திய அமைச்சர் கடிதம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் நேற்று 22-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் நுழைய லம்பூர், சோபியாபாத் உள்ளிட்ட மாற்றுப் பாதைகளை பொதுமக்கள் பயன்படுத்தினர். எனினும் மாற்றுப் பாதைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக 37 வயது விவசாயி நேற்று உயிரிழந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். டெல்லி போராட்டத்தில் இதுவரை 20 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஹரியாணாவின் கர்னால் பகுதியை சேர்ந்த சீக்கிய மதக் குரு பாபா ராம் சிங் கடந்த புதன்கிழமை டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கு கர்னால் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் வரும் 22-ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு நேற்று ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

சில விவசாய சங்கங்கள் மட்டுமே வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றன. ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது வீரர்களுக்கு உணவு பொருட்களை அனுப்ப முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டுள்ள 8 பக்க அறிக்கையை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘‘தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நரேந்திர சிங் தோமர் விவசாய சகோதார, சகோதரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கனிவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்புடைய அனைவரும் இதனை படிக்க வேண்டும். நாட்டு மக்கள் இதனை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT