மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக மாநிலப் பணியிலிருந்து விடுவியுங்கள் என மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. இதைக் கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. கூட்டாட்சி கட்டமைப்பைச் சிதைக்கும் செயல் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடந்த வாரம் மேற்கு வங்கத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, டைமண்ட் ஹார்பர் பகுதியில் அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகத் தேவையில்லை என மேற்கு வங்க அரசு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், ஜே.பி. நட்டாவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க போலீஸ் ஐ.ஐி. ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்.பி. போலா நாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதியது.
இதில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் எஸ்.பி.யாக பாண்டேவும், எஸ்எஸ்பி பிரிவில் டிஐஜியாக திரிபாதியும், இந்திய திபெத் எல்லைப் பிரிவு போலீஸில் ஐஜியாக மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
“மேற்கு வங்க அரசு ஆட்சபனை தெரிவித்தபோதிலும், மாநிலப் பணியிலிருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாற்றிய மத்திய அரசின் செயல் 1954-ஐபிஎஸ் விதியின் அவசரப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி அப்பட்டமாக மீறும் செயலாகும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
இந்தச் செயல், மாநிலத்தின் அதிகார வரம்பை ஆக்கிரமித்து, மேற்கு வங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மனச்சோர்வடையச் செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியைத் தவிர வேறில்லை.
குறிப்பாகத் தேர்தல்களுக்கு முன்னர் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இந்த நடவடிக்கை எதிரானது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாநில நிர்வாகத்தை அப்பட்டமாக கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் செயலை அனுமதிக்கமாட்டோம். ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளிடமும், ஆக்கிரமிப்பாளர்களிடமும் மேற்கு வங்கம் பணிந்து செல்லாது''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.