மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம் 
இந்தியா

3 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக மத்தியப் பணிக்கு அனுப்புங்கள்: மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் 

பிடிஐ


மத்தியஅரசுப் பணிக்குக் கோரிய மே.வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக மாநிலப் பணியிலிருந்து விடுவியுங்கள் என மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகக் கண்டித்துள்ளார்.


பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்தவாரம் மேற்கு வங்கத்துக்கு பயணம் மேற்கொண்டபோது, டைமண்ட் ஹார்பர் பகுதியில் அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற கார்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிஆகியோர் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக தேவையில்லை எனமேற்கு வங்க அரசு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், ஜே.பி. நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க போலீஸ் ஐ.ஐி. ராஜீவ் மிஸ்ரா,டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்.பி. போலா நாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசு பணிக்குமாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியது.

மேற்குவங்க தலைமைச் செயலாளருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், “ மத்திய அரசுப்பணிக்கு மாற்றி போலீஸ் ஐ.ஐி. ராஜீவ் மிஸ்ரா,டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்.பி. போலா நாத் பாண்டே ஆகியோருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தோம். அவர்கள் மூவருக்கும் மத்திய அரசு தரப்பில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆதலால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இதில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் எஸ்பியாக பாண்டேவும், எஸ்எஸ்பி பிரிவில் டிஐஜியாக திரிபாதியும், இந்திய திபெத் எல்லைப் பிரிவு போலீஸில் ஐஜியாக மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கடிதத்தின் நகலும் மே.வங்க போலீஸ் டிஜிபிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT