இந்தியா

ஹைட்ரோ கார்பன்; இந்தியா- வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

செய்திப்பிரிவு

இந்தியா- வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-வது பொன்விழா வெற்றி ஆண்டு கொண்டாடப்படுகிறது. 1971 போர் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.

1971 ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த பின்னர், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93,000 துருப்புக்களுடன், இந்திய ராணுவ வீரர்களையும் உள்ளடக்கிய நட்பு படைகளிடம் சரணடைந்தார். இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இம்மாதம் இன்று நடைபெற்றது.

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அவற்றின் பட்டியல்:

1. ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம்.

2. அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3. எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம்.

4. திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. வங்கதேசம் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. இந்தியா- வங்கதேச சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வங்கதேசத்திற்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் வங்கதேச அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

SCROLL FOR NEXT