பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து வங்கதேசத்தின் விடுதலைக்கு துணை நின்ற இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நாங்கள் எந்நாளும் கடமைபட்டுள்ளோம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-வது பொன்விழா வெற்றி ஆண்டு கொண்டாடப்படுகிறது. 1971 போர் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.
1971 ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த பின்னர், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93,000 துருப்புக்களுடன், இந்திய ராணுவ வீரர்களையும் உள்ளடக்கிய நட்பு படைகளிடம் சரணடைந்தார். இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இம்மாதம் இன்று நடைபெற்றது.
இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.
நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது:
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெறுவதற்காக உயர் நீத்த 3 லட்சம் தியாகிகளுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 1971-ம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து வங்கதேசத்தின் விடுதலைக்கு துணை நின்ற இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நாங்கள் எந்நாளும் கடமைபட்டுள்ளோம்.’’ எனக் கூறினார்.