உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற நபர், புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பரில், கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் எனவும் குறிப்பிடப்படும் இச்சட்டத்தின்படி திருமணத்திற்குக் கட்டாயமாக மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி சஞ்சய் குமார் கூறியதாவது:
"கடந்த சில நாட்களாக தம்பூரைச் சேர்ந்த ஒரு சிறுமியைக் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பிஜ்னோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். நேற்று (புதன்கிழமை) சிறுமியை போலீஸார் மீட்டனர். மதமாற்றம் செய்ய முயன்ற சாகிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சாகிப் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து அந்தப் பெண்ணிடம் சோனு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் அப்பெண்ணைக் கடத்திச் சென்று மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார். சட்டவிரோத மதமாற்றம் மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் சாகிப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது''.
இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.