இந்தியா

கரோனாவை போல தண்ணீர் பிரச்னைக்கும் உலகம் ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திர சிங் செகாவத் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவிட் பிரச்னையை போல், தண்ணீர் பிரச்னைக்கும் உலகம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நீர்த் தாக்க மாநாட்டில் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேசினார்.

ஐந்தாவது இந்திய நீர்த் தாக்க உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நதி பாதுகாப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கலந்து கொண்டு பேசியதாவது:

நீர் மற்றும் நதி மேலாண்மைக்கு, இந்தியா சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என இந்த மாநாட்டில் நீர்வளத்துறை முதலீட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் கூறினர்.

கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராட உலகம் ஒன்றிணைந்தது போல், நீர்த்துறையில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்யவும் உலகம் ஒன்றிணைய வேண்டும்.

உலகளவில் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவது நாம்தான். இதை குறைப்பதை நோக்கி நாம் செயல்படுகிறோம். நிலத்தடி நீரை பாதுகாக்க உலக வங்கியுடன் இணைந்து அடல் பூஜல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நடவடிக்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் பஞ்சாயத்து அளவில் நிலத்தடி நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT